அன்புள்ள கடிதத்திற்கு,
படிக்க பொறுமையில்லா உலகில்
இருக்க முகவரியில்லா உனக்கு
எழுத தெரியாத நான்
எழுதும் மடல்.
நலிந்து போன உன்
நிலை தெரிந்தும்
'நலமறிய ஆவல்' என்று
நகையாட விருப்பமில்லை....
தூரத்தினால் உறவுகள்
தொலைந்து போகாமல் இருக்க
உன் தயவை நம்பி
உலகம் இருந்த காலமுண்டு....
உலகம் சுருங்கி போனதில்
உன் வாழ்வும் சுருங்கி போனது!
மாதம் ஒருமுறை என்றாலும்
பசியாற்ற வரும்
அம்மாவின் கடிதங்கள்....
இன்று....
தினம் தினம் வரும்
தொலைபேசி அழைப்புகள்
திணிக்கப்படும் உணவாகி விட
பசியற்று தவிக்கிறது பாசம்!
வண்ணமயில் , கானக்குயில் என்று
வர்ணனைகள் கொஞ்ச
வானளாவ உன்னை
வளர்த்தெடுத்த காதலோ
இன்று...
எஸ்.எம். எஸ்.சில்
ஐ.எல்.யூ.வாக முடங்கிப் போனது!
நலம் விசாரித்து
நினைவு பெட்டகம் திறக்க
நீ கொண்டு வந்த நண்பர்கள்
இன்று....
இ-மெயில் இன் 'பார்வர்டு'களில்
யாருடைய நினைவுகளையோ
என்னுடன் பகிர்கிறார்கள்!
விடுப்புக் கடிதம்...
வேலை வேண்டி விண்ணப்பம்.....
யாருக்குக் கடிதம் எழுதினாலும்
ஆசிரியருக்குத் தான் போகுமென்று
பள்ளிகளின் கட்டுரை நோட்டுகள்
பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகின்றன!
பட்டணத்து உறவுகளின் பாசம்
பட்டாளத்துக் கணவனின் செய்தி
பரீட்சை முடியும் நாள்....
எல்லாம்
படித்துச் சொல்லும்
பேரரிஞர்களாய் வாழ்ந்த
பழங்கதைகள்....
இன்றைய தபால்காரர்களோ
அந்நியர்களாகி போனார்கள்!
மணப்பத்திரிக்கைகளும்
மதிப்பெண் பட்டியல்களும் தான் -உன்
மரணத்தைத் தள்ளி போடுகின்றன....
உணர்வுகள் உருக்குலைந்து
உயிரற்ற வார்த்தைகளாக நீ......
உன்னை இலக்கியத்தில் மட்டும் இருத்தி
அலங்காரப் பொருளாக்கும் நாள்
அருகில் தான் இருக்கிறது....
அது வரை ....
முகவரியற்ற இந்த கடிதம்
காற்றில் அலைந்து கொண்டிருக்கும்....
இப்படிக்கு,
இ-மெயில் தலைமுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment