Tuesday, December 7, 2010

முகவரி தொலைத்த கடிதம்

அன்புள்ள கடிதத்திற்கு,

  படிக்க பொறுமையில்லா உலகில்
  இருக்க முகவரியில்லா உனக்கு
  எழுத தெரியாத நான்
  எழுதும் மடல்.


  நலிந்து போன உன்
  நிலை தெரிந்தும்
  'நலமறிய ஆவல்' என்று
   நகையாட விருப்பமில்லை....

   தூரத்தினால் உறவுகள்
   தொலைந்து போகாமல் இருக்க
   உன் தயவை நம்பி
   உலகம் இருந்த காலமுண்டு....

   உலகம் சுருங்கி போனதில்
   உன் வாழ்வும் சுருங்கி போனது!

   மாதம் ஒருமுறை என்றாலும்
   பசியாற்ற வரும்
   அம்மாவின் கடிதங்கள்....

   இன்று....
   தினம் தினம் வரும்
   தொலைபேசி அழைப்புகள்
   திணிக்கப்படும் உணவாகி விட
   பசியற்று தவிக்கிறது பாசம்!

   வண்ணமயில் , கானக்குயில் என்று
   வர்ணனைகள் கொஞ்ச
   வானளாவ உன்னை
   வளர்த்தெடுத்த காதலோ
   இன்று...
   எஸ்.எம். எஸ்.சில்
   ஐ.எல்.யூ.வாக முடங்கிப் போனது!

   நலம் விசாரித்து
   நினைவு பெட்டகம் திறக்க
   நீ கொண்டு வந்த நண்பர்கள்
   இன்று....
   இ-மெயில் இன் 'பார்வர்டு'களில்
   யாருடைய நினைவுகளையோ
   என்னுடன் பகிர்கிறார்கள்!

   விடுப்புக் கடிதம்...
   வேலை வேண்டி விண்ணப்பம்.....
   யாருக்குக் கடிதம் எழுதினாலும்
   ஆசிரியருக்குத் தான் போகுமென்று
   பள்ளிகளின் கட்டுரை நோட்டுகள்
   பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகின்றன!

   பட்டணத்து உறவுகளின் பாசம்
  பட்டாளத்துக் கணவனின் செய்தி
  பரீட்சை முடியும் நாள்....
  எல்லாம்
  படித்துச் சொல்லும்
  பேரரிஞர்களாய் வாழ்ந்த
  பழங்கதைகள்....
   இன்றைய தபால்காரர்களோ
  அந்நியர்களாகி போனார்கள்!


  மணப்பத்திரிக்கைகளும்
  மதிப்பெண் பட்டியல்களும் தான் -உன்
  மரணத்தைத் தள்ளி போடுகின்றன....

  உணர்வுகள் உருக்குலைந்து
  உயிரற்ற வார்த்தைகளாக நீ......
  உன்னை இலக்கியத்தில் மட்டும் இருத்தி
  அலங்காரப் பொருளாக்கும் நாள்
  அருகில் தான் இருக்கிறது....


  அது வரை ....
  முகவரியற்ற இந்த கடிதம்
  காற்றில் அலைந்து கொண்டிருக்கும்....
                                                              இப்படிக்கு,
                                                        இ-மெயில் தலைமுறை

Wednesday, October 27, 2010

மௌன அஞ்சலி

மணி கணக்கில் நீடிக்கின்றன
மௌனங்கள்
யதார்த்தமாய் ...

சிநேகிதர்களுக்குள்
சண்டை வந்து
பேசாமலிருந்தது ...

காட்டிக் கொள்ள முடியாத
கோபத்தைக் காட்ட
கடைபிடித்த மௌனம் ...

உள்ளுக்குள் உடைபட்டு
உருகியழுது
கண்ணீருடன் கலந்த மௌனம் ...

பார்வைப் பரிமாற்றங்களின் போது
வார்த்தைகள் வேண்டாம் என்றாக
விழி மொழி பேசிய மௌனம் ...

துணை யாருமற்ற
தனிமை நேரங்களில்
துணையாக நின்ற மௌனம் ...

ஆனாலும்

மறைந்த தலைவருக்காக
முழு நிமிட அஞ்சலியாக
மௌனம் காப்பது மட்டும்
கஷ்டமாகத் தான் இருக்கிறது!

Wednesday, June 30, 2010

குழலினிது.....

உன் அடுப்பில்
விறகாகி
எரியும் புல்லாங்குழல்
நான் ....

பல்லாயிரம் செவிகளின்
பசி தீர்க்கத் தெரிந்தும்
உன் ஒருவனின்
பசிக்காக என்னைத் தருகிறேன்...

நீ எரித்துக் கொண்டிருப்பது
என் மூங்கிலை
மட்டுமல்ல...
எனக்குள் உறைந்திருந்த
ராகங்களையும் தான் !

உன்
பசியில் அனைத்தும்
பறந்து போனது....

அதனால் என்ன ?

இசைபதற்கு நீயின்றி
குழலாய் இருப்பதை விட- உன்
பசியைத் தணிக்க
விறகாவதே என் விருப்பமும்.....

ஆனால் ...

எரிந்த என் சாம்பலிலிருந்து
இன்னிசை கசியும்
என்று மட்டும்
எதிர்பார்த்து
ஏமாந்திடதே!

Thursday, May 13, 2010

யாருக்கு சொந்தம் ?

பாடலை வடித்தவன்
கவிஞன் .... அதன்
பெருமையை அறிந்தவன்
ரசிகன் ...!

காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு ..

ஆம்!

படைத்தவனுக்குக் காக்கை ....
படித்தவனுக்கோ குயில் !

எழுதிய கவிஞன் இல்லையென்றால்
பாடல் பிறந்திருக்க முடியாது ...

பழகிய ரசிகன் இல்லையென்றால் -அது
பிறந்ததில் பொருளே கிடையாது !

பாடலுக்கு யாருடன்
அதிக உறவு ?

கவிஞனுடனா?
ரசிகனுடனா?

Friday, May 7, 2010

ஒரு பறவையின் பாடல்

எனக்கும்
இறக்கைகள் உண்டு
என்பதையே மறந்திருந்தேன் ...

ஏன் எனக்கு
பறக்க கற்றுதந்தாய் ?

விண்ணிலே நாம் பறந்த
வினோத கணங்களை
கண்ணீருடன் நினைக்கிறேன்
இன்று ...

நினைத்த பொழுதில்
சிறகடித்து செல்ல
நீயோ சுதந்திர பறவை ...

கூண்டின் கதவு வழி
கண் தெரியும் வானம் ...

இயலாமையுடன் வெறிக்கிறேன் -என்
இறக்கைகளே சுமையாக . . .!