Wednesday, December 26, 2012

தொலைதல்


குழந்தைகளின்
கண்ணாமூச்சியில் கூட
தொலைந்து போகத்
தெரியாதவர்கள் ....
திருவிழாவின் போது
தொலைந்து போகும்
குழந்தையை விட
பரிதாபமானவர்கள் !

Monday, August 6, 2012

நடிகையின் காதல்...

 ஒரு நடிகை
காதலித்தால்......

எப்படி வந்தது
இந்த காதலென்று
எடுத்துக் கூற
கதாசிரியர் இல்லாத போது...

வெட்கப்படுவது எப்படி
என்று இயக்குனர்
கற்றுக் கொடுக்காத போது...

காதலனிடம் பேச வேண்டிய 
கவிதை வரிகளைக்
கற்பிக்க
வசன கர்த்தா இல்லாத போது....

கன்னச் சிவப்பை
ஒப்பனைகள்
கொண்டு வராத போது....

பல நூறு பார்வையும்
பல வண்ண வெளிச்சமும்
இல்லாத போது...

ஒரு நடிகை
காதலித்தால் ....

காமிராக் கண்கள்
சுட்டு விடாத
அவள் முகத்தின்
உண்மை காதல்
அவள் மனத்திரையில் மட்டுமே
பதிவு செய்யப் பட்டிருக்கும்!






      

Tuesday, June 19, 2012

துடிப்பு!

கொல்லப்பட்டவன் ...
என் நாட்டவன் ,
என் இனத்தவன் ,
என் மதத்தவன் ,
என் சாதிக்காரன் 
என்ற வார்த்தைகள் 
துடிக்க வைப்பதுப்போல் 
துடிக்க வைப்பதில்லை .......
' ஒரு மனிதன் கொல்லப்பட்டான் '
எனும் போது !

Monday, June 18, 2012

மீதமிருக்கும் மழலை......!

"அம்மா" 
என்ற ஒரு சொல்லன்றி 
பேச வார்த்தைகள் இல்லாதபோது 
மழலை பிறந்தது ...

பள்ளி பாடல்களின் 
வரிகள் குழற 
ராகம் மாறாமல் பாடிய போது 
மழலை மணந்தது ....

பிறகு...
வளர வளர 
மொழி சீரடைந்து 
மழலை மறந்தது .....

ஆனால்......
எத்தனை ஆண்டுகள் கடந்தும் 
தாயின் மடி புதைந்து 
அழும்போது....
"அம்மா" என்ற சொல்லன்றி 
பேசும் வார்த்தைகள்
வராத போது புரிந்தது....
மழலை இன்னும் மீதமிருக்கிறதென்று!

Friday, May 25, 2012

இன்றும் சில புத்தர்கள்

உணவு என்பது 
நான்கு வேளைகள் 
என்று தன் அனுபவத்தால் 
அறிந்து கொண்டான்...

அத்தியாவசிய தேவைகள் என்பது 
கார், கணினி, கைப்பேசி 
என்று தன் தந்தையிடம் 
கற்றுக் கொண்டான்...

வாழ்க்கை என்பது 
பெரிய பள்ளிகளின் 
மதிப்பெண் பட்டியலால் 
விளைவிக்கப் படுவதென்று 
பலர் விளம்பக் கற்றுக் கொண்டான்....

நகம் உடைந்தால் கூட 
டாக்டரிடம் போக வேண்டுமென்று 
அறிவுரைக்கப் பட்டு 
அறிந்துக் கொண்டான்....

பிறிதொரு நாள் .....

ஒரு வேளை உணவுக்கு 
ஓடும் உழைப்பு 
குளிரில் நடுநடுங்க வைக்கும் 
கிழிந்த சட்டை 
மழைக்கு ஒதுங்கி மட்டுமே 
உறவு கொண்ட பள்ளி 
மந்திரமாகும் நீறே 
மருந்துமாகும் நோய்கள் 
என போகும் 
சக ஜீவனின் வாழ்க்கை கண்டான் ...!

ஞானத்தின் முதல் ஊசி ஒளி 
கேள்விகளாய் முளை விட 
இளகத்தான் செய்கிறது 
இவை பார்க்கும் இள மனங்கள்...

ஆனால்....

"கண்ட பசங்களோட 
சேரக் கூடாது" என்ற 
கண்டிப்புக் குரலொலியில் 
எத்தனையோ 
புத்தர்கள் ஆங்காங்கே 
புதைந்து போய் விடுகிறார்கள்!