Sunday, September 8, 2013

காக்காத் தூக்கிட்டு போச்சு!

பாட்டிச் சுட்ட வடையிலிருந்து
அம்மா ஒளித்து வைத்த மிட்டாய் வரை
அனைத்தையும் தூக்கிப் போகிறது....

உடைந்து போகுமோ
என பயந்து
ஒளித்து வைக்கப்பட்ட
அப்பாவின் பேனாவை...

விளையாட்டாய் அக்கா
முதுகுக்குப் பின் மறைத்த
பூனை பொம்மையை....

அடம்பிடிக்கும் பிள்ளைக்கு
அம்மா கண் மூடியபடி நீட்டும்
கடைசி கவளத்தை....

சிற்சில சமயங்களில்
வெயிலை, மழையை
கடைக்கு துணை வந்த தாத்தாவை கூட....!

அதன் வலிமையை மீறிய
எதையெதையோ தூக்கிப் போனதாய்
பழி சுமத்தப் பட்டாலும்
கலக்கமில்லா உற்ச்சாகத்துடன்
இன்னும் சுதந்திரமாக
பறந்து கொண்டிருக்கிறது காகம்!

No comments:

Post a Comment