உணவு என்பது
நான்கு வேளைகள்
என்று தன் அனுபவத்தால்
அறிந்து கொண்டான்...
அத்தியாவசிய தேவைகள் என்பது
கார், கணினி, கைப்பேசி
என்று தன் தந்தையிடம்
கற்றுக் கொண்டான்...
வாழ்க்கை என்பது
பெரிய பள்ளிகளின்
மதிப்பெண் பட்டியலால்
விளைவிக்கப் படுவதென்று
பலர் விளம்பக் கற்றுக் கொண்டான்....
நகம் உடைந்தால் கூட
டாக்டரிடம் போக வேண்டுமென்று
அறிவுரைக்கப் பட்டு
அறிந்துக் கொண்டான்....
பிறிதொரு நாள் .....
ஒரு வேளை உணவுக்கு
ஓடும் உழைப்பு
குளிரில் நடுநடுங்க வைக்கும்
கிழிந்த சட்டை
மழைக்கு ஒதுங்கி மட்டுமே
உறவு கொண்ட பள்ளி
மந்திரமாகும் நீறே
மருந்துமாகும் நோய்கள்
என போகும்
சக ஜீவனின் வாழ்க்கை கண்டான் ...!
ஞானத்தின் முதல் ஊசி ஒளி
கேள்விகளாய் முளை விட
இளகத்தான் செய்கிறது
இவை பார்க்கும் இள மனங்கள்...
ஆனால்....
"கண்ட பசங்களோட
சேரக் கூடாது" என்ற
கண்டிப்புக் குரலொலியில்
எத்தனையோ
புத்தர்கள் ஆங்காங்கே
புதைந்து போய் விடுகிறார்கள்!
This comment has been removed by the author.
ReplyDelete